அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள ராணுவ மோதலால் மத்திய கிழக்கில் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், ஓமன் அருகே வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாயமான 3 இந்திய மாலுமிகளும் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படை முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டுள்ள சூழலில், கடந்த ஜூன் 8-ஆம் தேதி மீது தாக்குதல் நடத்தப்பட்டு 24 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, நேற்று ஓமனின் 20 கடல் மைல் தொலைவில், பலாவ் நாட்டு கொடியுடன் சென்ற ரசாயனம் மற்றும் எண்ணெய் ஏற்றி வந்த வணிகக் கப்பல் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முற்றுகையைத் தாண்டி வந்த இந்தக் கப்பலின் என்ஜின் அறையில் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்ததை அடுத்து, ஓமன் கடற்படையினர் 21 இந்திய மாலுமிகளை மீட்டனர்.
இச்சம்பவத்தில் மாயமான 3 இந்திய மாலுமிகளும் உயிரிழந்துவிட்டதாகத் மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஆரம்பத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 3 இந்திய மாலுமிகளின் உடல்களும் மீட்கப்பட்டு, உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முழு ஆதரவை அளிக்கும். மீட்கப்பட்ட மாலுமிகளையும், உயிரிழந்தவர்களின் உடல்களையும் உடனடியாக தாயகம் கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.இதற்கிடையே, பலியான மாலுமிகள் ஆந்திரா, உத்தரப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என மாலுமிகள் யூனியன் பொதுச்செயலாளர் மனோஜ் யாதவ் தெரிவித்துள்ளார்.
மேலும், “தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களில் இந்தியர்கள் இருக்கும் விவரம் அமெரிக்காவிற்குத் துல்லியமாகத் தெரியும். உத்தரவை மீறினால் கப்பல்களைக் கைப்பற்றி வைத்திருக்கலாமே தவிர, இப்படித் தாக்குதல் நடத்தியதை ஏற்க முடியாது” என அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய மாலுமிகள் பலியான இந்தத் துயரச் சம்பவத்தை அடுத்து, இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகம் அமெரிக்கத் துணைத் தூதர் ஜேசன் மீக்சை நேரில் வரவழைத்து, இந்தத் தாக்குதலுக்குத் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
