கார்ப்பரேட் உலகில் ‘வேலை-வாழ்க்கை சமநிலை’  குறித்த விவாதங்கள் உலகளவில் தீவிரமடைந்துள்ள நிலையில், நார்வே நாட்டில் பணியாற்றும் இந்தியர் ஒருவரின் சுவாரசியமான அனுபவம் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து நார்வே நாட்டிற்கு வேலைக்காகக் குடியேறிய அந்த நபர், அங்கு தனது ‘இந்திய வேலை கலாச்சாரத்தின்படி’ விடுமுறை நாட்களிலும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் தொடர்ந்து கடினமாக உழைத்துள்ளார். இதைக் கவனித்த அவரது நார்வே நாட்டு மேலாளர் பாராட்டுவதற்குப் பதிலாக அவரை அழைத்துத் திட்டியுள்ளார். இந்த வித்தியாசமான அனுபவம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“நார்வே நாட்டில் விடுமுறை என்பது கட்டாயமான ஒன்று; அதை யாரும் தவிர்க்கக் கூடாது” என்று அவரது மேலாளர் கண்டிப்புடன் கூறியுள்ளார். இந்தியாவில் பொதுவாக கூடுதல் நேரம் வேலை செய்வது  திறமையாகவும், அர்ப்பணிப்பாகவும் பார்க்கப்படும் நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஊழியர்களின் மன நலத்திற்கும், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் எவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. இந்திய நிறுவனங்களிலும் இத்தகைய ஆரோக்கியமான வேலைச் சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்ற விவாதத்தை இந்த இந்தியரின் நெகிழ்ச்சியான மற்றும் சுவாரசியமான பகிர்வு தற்பொழுது கார்ப்பரேட் ஊழியர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.