நியூசிலாந்து கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று (ஜூன் 17, 2026) தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே பலத்த அதிர்ச்சியாக அமைந்தது;

அந்த அணியின் தொடக்க வீரர் டெவோன் கான்வே 9 ரன்களிலும், ஹென்றி நிக்கோல்ஸ் 24 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 33 ரன்களிலும் இங்கிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெரும் தடுமாற்றத்தை சந்தித்தது. ​இந்த இன்னிங்ஸின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய ஓவரில் நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் 27 ரன்கள் எடுத்திருந்தபோது ஒரு சுவாரசியமான விக்கெட் விழுந்தது.

ஆர்ச்சர் வீசிய பந்தை லாதம் லாவகமாக ஃபிளிக் செய்ய முயன்றபோது, பந்து பேட்டின் விளிம்பில் பட்டு கல்லி திசையை நோக்கி வேகமாகப் பறந்தது. அப்போது அங்கு ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த இங்கிலாந்தின் இளம் வீரர் ஜேகப் பெத்தெல், மின்னல் வேகத்தில் காற்றில் பறந்து டைவ் அடித்து ஒற்றைக் கையில் ஒரு அசாத்தியமான கேட்ச்சை பிடித்து அசத்தினார். இந்த மிரட்டலான கேட்ச் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் தற்போது லண்டனில் பரபரப்பாகத் தொடர்ந்து நடந்து வருகிறது.