தமிழக வெற்றிக் கழக அரசை ‘சோஃபா மாடல் அரசு’ என்று விமர்சித்த திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தவெக கொள்கை பரப்புச் செயலாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான அருண்ராஜ் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “இப்படிப்பட்ட மோசமான அரசுக்கு வாக்களித்துவிட்டோமே என்று மக்கள் வருத்தப்படுகின்றனர்; 4 இருக்கை கொண்ட சோஃபா இப்போது 5 இருக்கை சோஃபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சோஃபா மாடல் ஆட்சியை மக்கள் வீட்டிற்கு அனுப்பும் நாள் வெகுதொலைவில் இல்லை” என்று விமர்சித்ததோடு, தனது எக்ஸ்  தளத்திலும் பதிவிட்டிருந்தார். இதற்கு தவெக தரப்பில் இருந்து தற்பொழுது அனல் பறக்கும் கவுண்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

உதயநிதியின் விமர்சனத்திற்கு எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் அருண்ராஜ், “தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்கு பின் பேரன் என ஒரே குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும்  சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி எப்படித் தெரியும்? இது முதல்வர் விஜய் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோஃபா; சனாதன சிம்மாசனங்களுக்கு இதைப் பற்றி பேச யோக்கியதை இல்லை” என சாடியுள்ளார். மேலும், தமிழகத்தில் வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும், இனி அனைவருக்கும் அதிகாரப் பகிர்வு அளிக்கும் ஜனநாயக சோஃபா ஆட்சி தான் என்றும் அவர் மிரட்டியுள்ளார்.