ஆப்பிரிக்க நாடான கென்யாவின் மேற்குப் பகுதியில் வாழும் ‘லுகியா’ (Luhya) பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ‘புகுசு’ (Bukusu) மக்களின் விசித்திரமான இறுதிச்சடங்கு முறைகள் குறித்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்று வருகின்றன. பொதுவாக மனிதர்கள் இறந்த பிறகு அவர்களின் உடல்களைக் படுக்க வைத்த நிலையில் புதைப்பதே உலக வழக்கம்.
ஆனால், இந்த பழங்குடியின மக்கள் தங்களது சமூகத்தில் வாழ்ந்த ஆன்மீகத் தலைவர்கள் மற்றும் மதிக்கத்தக்க மூத்த பெரியவர்கள் இறக்கும் போது, அவர்களின் உடல்களைக் குழிக்குள் படுக்க வைக்காமல் நேராக நிற்க வைத்த நிலையில் (செங்குத்தாக) புதைக்கும் வினோதப் பழக்கத்தைப் பல தலைமுறைகளாகப் பின்பற்றி வருகின்றனர். இறந்தவர்களின் உடல்களை இப்படி நேராக நிற்க வைப்பது என்பது அவர்களின் வலிமை, கௌரவம் மற்றும் அடுத்த உலகத்திற்கான அவர்களின் பயணத்திற்கு எப்போதும் தயாராக இருக்கிறார்கள் என்பதைக் குறிக்கும் குறியீடாக அம்மக்களால் நம்பப்படுகிறது.
பெரும்பாலான இறுதிச்சடங்குகளில், இறந்தவர்களின் உடல்கள் கிழக்கு நோக்கியோ அல்லது அவர்களின் குடும்ப வீட்டை நோக்கியோ இருக்குமாறு நின்ற நிலையில் வைக்கப்பட்டு, அவர்களின் பண்டைய பூர்வகுடி பாரம்பரிய வழக்கங்களின்படியும், தற்கால நவீன கிறிஸ்தவ மத வழிபாட்டு முறைகளின்படியும் அடக்கம் செய்யப்படுகின்றன. தங்களின் பண்டைய கலாச்சாரத்தையும் நவீன நம்பிக்கையையும் இணைத்து புகுசு மக்கள் நடத்தும் இந்த விசித்திரமான இறுதிச்சடங்கு முறை தற்போது சோசியல் மீடியாவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
