மகாராஷ்டிர மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான லோஹ்காட் கோட்டைக்கு (Lohagad Fort), தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற பிரபல தொழிலதிபரின் மகன், எதிர்பாராதவிதமாக 350 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டுமானத் துறையில் முன்னணி நிறுவனத்தை நடத்தி வரும் பிரபல பில்டர் விஷால் அகர்வாலின் மகன் கேதன் அகர்வால் (26) என்பவர், வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இக்கோட்டையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கால் தவறி நிலைதடுமாறி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தார்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினருடன் இணைந்து, மிகக் கடினமான நிலப்பரப்பில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு கேதனின் உடலை மீட்டனர். பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரை, மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் விபத்து மரணமாகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தத் துயரச் சம்பவம் அகர்வால் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த கேதனுக்கு அடுத்த மாதத்தில் ஜெய்பூரில் உள்ள ஒரு சொகுசு அரண்மனையில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பிரம்மாண்டமாகத் திருமணம் நடைபெறவிருந்தது. இதற்காக, திருமணத்திற்கு வரும் விருந்தினர்களை அழைத்து வர இரண்டு தனி விமானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மேலும், ஜூன் 19 அன்று வரவிருக்கும் அவரது வருங்கால மனைவியின் பிறந்தநாளை மகாபலேஸ்வரில் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு கேதன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்த நிலையில், அதற்கு முதல் நாளே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. திருமணக் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த குடும்பத்தில், கேதனின் இந்த திடீர் மரணம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, மலைப்பாங்கான மற்றும் கோட்டைப் பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் இச்சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.