இமாச்சலப் பிரதேசத்தின் புகழ்பெற்ற மலை நகரமான மணாலியில் தங்கி, வீட்டிலிருந்தே பணிபுரிந்து வரும் தம்பதியினர், தங்களின் மாத அத்தியாவசியச் செலவு குறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். ‘டூ வேகபாண்ட் மாங்க்ஸ்’ (Two Vagabond Monks) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்தி வரும் இந்த ஜோடி, அங்குள்ள ஒரு சமையலறையுடன் கூடிய ஒற்றை அறை வீட்டில் வசித்து வருவதாகவும், அதன் மாத வாடகை வெறும் ₹5,000 மட்டுமே என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்களின் மாதாந்திர மின்சாரக் கட்டணம் ₹300-க்குள்ளும், வீட்டிலேயே சமைப்பதால் மளிகைப் பொருட்கள் செலவு ₹4,000-க்குள்ளும் அடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளனர். சமைக்காத நாட்களிலும், மின்வெட்டு ஏற்படும் நேரங்களிலும் அருகில் உள்ள சிற்றுண்டிச்சாலைகளுக்குச் செல்வதன் மூலம் உணவகச் செலவு ₹1,500 ஆகிறது என்றும், ஒட்டுமொத்தமாக ₹12,000-க்குள்ளேயே தங்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்து கொள்வதாகவும் அவர்கள் விளக்கியுள்ளனர்.
இந்த வீடியோ இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன்களில் ஒரு தரப்பினர், “நாங்கள் வார இறுதியில் மணாலிக்கு வந்து செல்லும் செலவில் நீங்கள் ஒரு மாதத்தையே ஓட்டிவிடுகிறீர்கள்” என பாராட்டியதோடு, தமக்கும் அதுபோன்ற வாடகை வீடுகளைக் கண்டறிய உதவுமாறு கோரியுள்ளனர்; அத்துடன் குருகிராம் போன்ற பெருநகரங்களில் காற்று மாசுபாட்டிற்கு இடையே வசிப்பதை விட இது எவ்வளவோ மேல் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
https://www.instagram.com/reel/DZpmaghS76l/?igsh=Yjg4cDZoY2hraXI1
எனினும், மற்றொரு தரப்பினர் இவர்களின் செலவு கணக்கை விமர்சித்துள்ளனர். குறிப்பாக, இமாச்சலப் பிரதேசத்தில் போக்குவரத்துச் செலவு மிக அதிகம் என்பதால், தம்பதியினர் குறிப்பிட்ட ₹500 என்ற பயணச் செலவு அரசுப் பேருந்துகளில் பயணித்தால் மட்டுமே சாத்தியம், வாடகை கார்களில் சாத்தியமே இல்லை என்றும், அங்குள்ள மொபைல் நெட்வொர்க் மற்றும் வைஃபை வசதிகளின் உண்மைத்தன்மை குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
