கர்நாடக மாநிலம் பெங்களூரில், விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் ஒருவன் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல் தனது வீட்டில் சுறுசுறுப்பாக விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவனுக்கு, திடீரென கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளான். பதறிப்போன அவனது பெற்றோர், உடனடியாக சிறுவனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தனர்.

பொதுவாக முதியவர்களுக்கும், நடுத்தர வயதினருக்கும் மட்டுமே ஏற்படும் மாரடைப்பு, இவ்வளவு சிறிய வயதில் 4 வயது சிறுவனுக்கு ஏற்பட்டு உயிர் பிரிந்திருப்பது அவனது குடும்பத்தினரையும், பொதுமக்களையும் நிலைகுலையச் செய்துள்ளது. இது குறித்து மருத்துவர்கள் விளக்குகையில், பிறவியிலேயே இதயத்தில் இருக்கும் சில குறைபாடுகள் அல்லது அரிதான மரபணு ரீதியான இதயம் சார்ந்த கோளாறுகள்  காரணமாகவே இத்தகைய சிறுவயது மாரடைப்பு ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சிறுவர்களின் உடல்நிலையில் சோர்வோ அல்லது அசாதாரண மாற்றங்களோ தென்பட்டால் பெற்றோர் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.