பீகார் மாநிலத்தின் எல்லை நகரமான ரக்ஸாலைச் சேர்ந்த 15 வயது வீராங்கனை அக்ஷரா குப்தா, பீகார் மகளிர் 19 வயதுக்குட்பட்டோருக்கான (Under-19) ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 306 ரன்கள் குவித்து அசத்தலான சாதனை படைத்துள்ளார். பாகல்பூரில் உள்ள சாண்டிஸ் காம்பவுண்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், அதிரடியாக விளையாடிய இடதுகை பேட்டரான அக்ஷரா குப்தா, வெறும் 126 பந்துகளில் 233 நிமிடங்கள் களத்தில் இருந்து இந்த இலக்கை எட்டினார். அவரது இந்த இன்னிங்ஸில் 55 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும்.

மேலும், 242.08 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடிய அவர், தனது மொத்த ரன்களில் 268 ரன்களை பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் மூலமாகவே பெற்றுள்ளார். வெறும் 34 பந்துகளிலேயே தனது சதத்தைப் பூர்த்தி செய்த அக்ஷரா குப்தா, மிக இளம் வயதில் முச்சதம்  அடித்த பீகாரின் முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

சமீபத்தில் தனது 15 வயதில் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்த வைபவ் சூர்யவன்ஷியைப் போலவே, அக்ஷரா குப்தாவும் தனது அசாத்திய திறமையால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்திய உள்நாட்டு மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முச்சதம் அடித்த தேர்ந்தெடுக்கப்பட்ட வீராங்கனைகளின் பட்டியலில் தற்போது அக்ஷராவும் இணைந்துள்ளார். உள்நாட்டு மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச தனிநபர் ரன் குவித்த சாதனையை மும்பையைச் சேர்ந்த இரா குப்தா (346 ரன்கள்) வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

15 வயதிலேயே தனது திறமையை நிரூபித்து, எதிர்கால நட்சத்திரமாக உருவெடுத்துள்ள அக்ஷரா குப்தா, கிரிக்கெட்டின் அனைத்து வடிவ போட்டிகளிலும் பீகார் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமிலும் அவர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்கள் பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றன.