தமிழகத்தில் தவெக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் ஆளுநர் உரையுடன் நிறைவு பெற்றது. இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக சட்டசபை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் விஜய் கர்நாடக மாநில அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனி தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் போது கொள்கை சார்பாக நாம் அனைவரும் வேறுபட்டு இருந்தாலும் நம் தமிழக விவசாயிகளின் நலனைக் காப்பதற்காக அனைவரும் இந்த விஷயத்தில் ஒரு அணியாக நிற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தத் தீர்மானத்திற்கு தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு கொடுத்து கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் ராஜேஷ்குமார் பேசும்போது மேகதாது அணை கட்டுவது தமிழ்நாட்டை வஞ்சிக்கும் செயல். மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது என்றார். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தளி ராமச்சந்திரன் நம்முடைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கர்நாடக காங்கிரஸ் உறுப்பினர்களை தொடர்பு கொண்டு இந்த விவகாரத்தில் உரிய தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
