ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் உள்ள சப்வே (Subway) சுரங்கப்பாதை இரயிலில், இளம் பெண்களைத் தவறான நோக்கில் ரகசியமாகப் புகைப்படம் எடுத்த நபரை அங்குள்ள பெண்கள் ஒன்று திரண்டு மடக்கிப் பிடித்த துணிச்சலான சம்பவம் உலகளவில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. அந்த இரயிலில் பயணம் செய்த நபர் ஒருவர், தனக்கு அருகில் நின்றுகொண்டிருந்த இளம் பெண்களை அவர்களின் அனுமதியின்றி, தனது மொபைல் கேமரா மூலம் அநாகரீகமான முறையில் ரகசியமாகப் படம் பிடித்துள்ளார்.

இதனை கவனித்த சக பெண் பயணி ஒருவர் உடனடியாக சத்தமிட்டு மற்றவர்களையும் எச்சரித்துள்ளார். ​இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர், உடனடியாக இரயிலில் இருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளார். ஆனால், அங்கிருந்த ஜப்பான் பெண்கள் அனைவரும் நொடிப் பொழுதில் ஒன்று திரண்டு, அந்த நபரை நாலாபுறமும் சூழ்ந்து கொண்டு தப்பவிடாமல் வளைத்துப் பிடித்தனர்.

அவர் எவ்வளவு முயன்றும், இரயில் நிலையத்திற்குப் போலீசார் நேரில் வந்து அவரை அதிகாரப்பூர்வமாகக் கைது செய்யும் வரை அந்தப் பெண்கள் அவரைச் சற்றும் தளராமல் பிடித்து வைத்திருந்தனர். பெண்களின் இந்த அதிரடி ஒற்றுமை மற்றும் துணிச்சலான ஆக்ஷன் குறித்த வீடியோ தற்போது எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் வெளியாகி, உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்களிடையே காட்டுத்தீயாய் பரவி பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.