சென்னையில் பள்ளி மாணவி ஒருவரை மாதவிடாய் (Periods) காரணத்திற்காக வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த மனிதாபிமானமற்ற சம்பவத்திற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மிகக் கறாராகத் தெரிவித்துள்ளார்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வகுப்பறையில் துர்நாற்றம் வீசுவதாகக் கூறி, 11 வயது மாணவியை ஆசிரியர் ஒருவர் பள்ளி முடியும் வரை வெளியே நிற்க வைத்ததாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் சமூக வலைத்தளங்களில் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியக் குறைவான சம்பவங்களில் இனிமேல் எவ்வித சமரசமும் கிடையாது என்றும், தவறு செய்த அந்த ஆசிரியர் மீது பள்ளிக்கல்வித்துறை மூலம் மிகக் கடுமையான துறை ரீதியான மற்றும் சட்ட ரீதியான ஆக்ஷன் எடுக்கப்படும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற பிற்போக்குத்தனமான செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள அமைச்சரின் இந்த அதிரடி அறிக்கை, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தாருக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
