சென்னை கோபாலபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 11 வயது மாணவி ஒருவரை மாதவிடாய் (Periods) காரணத்திற்காக வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த ஆசிரியரின் மனிதாபிமானமற்ற செயலுக்குப் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வகுப்பறையில் துர்நாற்றம் வீசுவதாகக் கூறி, அந்தச் சிறுமியைப் பள்ளி முடியும் வரை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி வீட்டிற்குச் சென்று அழுதுகொண்டே பெற்றோரிடம் கூற, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், இக்காலத்திலும் இயற்கை உபாதையான மாதவிடாயைக் காரணம் காட்டி ஒரு பெண் குழந்தைக்கு இப்படி மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பது மிகக் கொடுமையானது என்றும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது அரசு உடனே கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் ஆக்ஷன் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவம் தமிழக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நயினார் நாகேந்திரனின் இந்த அதிரடிக் கண்டனம் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.