உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரயிலில் பயணம் செய்த பயணிகள் ஒரு விசித்திரமான சம்பவத்தைச் சந்தித்துள்ளனர். டிடிஇ போல முழு உடையும் அணிந்து கொண்டு உலா வந்த பெண் ஒருவரின் போலித் தனத்தை, ரயிலில் இருந்த விழிப்புணர்வு மிக்க பயணி ஒருவர் கேமரா மூலம் அம்பலப்படுத்தியுள்ளார்.

அந்தப் பெண் கருப்பு ஜாக்கெட் மற்றும் கழுத்தில் போலி அடையாள அட்டை அணிந்து கொண்டு உண்மையான ரயில்வே அதிகாரி போலவே வலம் வந்துள்ளார். ரயிலில் பயணம் செய்த பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்து, டிக்கெட் இல்லாதவர்களிடம் இருந்து தலா 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை அபராதமாகப் பணம் வசூலித்து வந்துள்ளார்.

அடுத்த பெட்டிக்கு அவர் டிக்கெட் பரிசோதனை செய்யச் சென்றபோது, அங்கிருந்த பயணி ஒருவருக்கு அந்தப் பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் தனது மொபைல் கேமராவை ஆன் செய்து, “உங்கள் ஊழியர் எண் என்ன? உங்களின் உண்மையான அடையாள அட்டையைக் காட்டுங்கள்” என்று கேள்வி எழுப்பினார்.

பயணியின் கேள்வியைக் கேட்டுத் தடுமாறிய அந்தப் பெண், முன்னுக்குப் பின் முரணாகப் பேசத் தொடங்கினார். தான் வேறொரு மேடமின் உத்தரவின் பேரில்தான் பரிசோதனைக்கு வந்ததாகவும், மத்திய பிரதேசத்தில் தான் தனக்கு டியூட்டி என்றும் கூறி மழுப்ப முயன்றார். அதற்குள் சக பயணிகளும் அங்கு கூடிவிட்டனர்.

“>

அந்தப் பெண்ணிடம் நடத்திய சோதனையில் பயணிகளிடம் வசூலித்த சுமார் ₹3,500 முதல் ₹4,000 வரை ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. உடனடியாக பயணிகள் ரயில்வே பாதுகாப்புப் படைக்கு தகவல் தெரிவித்தனர். ரயில் நிலையத்தைடைந்ததும், அந்தப் போலி பெண் டிடிஇ-யை அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.