வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்குத் திருமணமாகி, தனது கணவருடன் கேரளாவில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், புதிய வேலை தேடும் நோக்கில் அந்த இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவில் ரயில் மூலமாகத் திருப்பூர் வந்துள்ளார். நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் அடுத்து எங்குச் செல்வது என்று தெரியாமல் அவர் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், அந்தப் பெண்ணிடம் நைசாகப் பேச்சுக் கொடுத்து, தனக்குத் தெரிந்த இடத்தில் நல்ல வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார்.
அவரது பேச்சை நம்பிய இளம்பெண்ணை, அந்த நபர் நள்ளிரவிலேயே தனது லாரியில் ஏற்றிச் சென்றுள்ளார். திருப்பூர் பெருமாநல்லூர் கணக்கம்பாளையம் அருகே லாரியை நிறுத்திய அந்த நபர், ஆள் நடமாட்டம் இல்லாத ஓரிடத்தில் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாகப் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டு அலறியதோடு, அவரிடமிருந்து தப்பி ஓடிவந்து அங்கிருந்த பொதுமக்களிடம் உதவி கேட்டுள்ளார். பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அந்தப் பெண்ணை மீட்டனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், வேலை தருவதாக ஏமாற்றி இளம்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட இந்த அத்துமீறல் தொடர்பாக, லாரி ஓட்டுநரான அந்த நபரை மடக்கிப் பிடித்து அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
