“சொத்து சுகங்களை விட மனநிம்மதியே முக்கியம்” என்பதை உணர்த்தும் விதமாக, அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியர் ஒருவர் தனது சொத்துக்களைத் துறந்துவிட்டு தாயகம் திரும்ப முடிவெடுத்துள்ள சம்பவம் இணையத்தில் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவில் நல்ல நிலையில் செட்டில் ஆகியிருந்த அந்த நபரின் மனைவி, எதிர்பாராதவிதமாக கடுமையான நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். இந்தச் சூழலில், எவ்வளவுதான் பணம் இருந்தாலும் வெளிநாட்டில் தங்களுக்குக் கிடைக்காத மனஅமைதியும், உறவுகளின் ஆதரவும் தாயகத்தில்தான் கிடைக்கும் என்பதை உணர்ந்த அவர், அமெரிக்கா வாழ்வை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டு இந்தியா திரும்பும் அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
தன்னிடம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.46 கோடி அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், “இந்தத் தொகை இந்தியாவில் குடும்பத்துடன் நிம்மதியாக செட்டில் ஆக போதுமா?” என்று சமூக வலைதளப் பக்கத்தில் பிற பயனாளர்களிடம் ஆலோசனை கேட்டுப் பதிவிட்டுள்ளார். இந்த உருக்கமான பதிவு இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், அதற்குப் பதிலளித்துள்ள நெட்டிசன்கள் பலரும், “அதில் பாதித் தொகை (ரூ.23 கோடி) இருந்தால் கூட இந்தியாவில் ஆயுள் முழுக்க ராஜ வாழ்க்கை வாழலாம் பாஸ்! பணத்தை விட உங்கள் மனைவியின் ஆரோக்கியமும் மனநிம்மதியுமே முக்கியம், உங்கள் முடிவு மிகச் சரியானது” என அவருக்கு ஆதரவாக ஃபயர் விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
