சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் விதிகளை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்குச் செல்லும் நதிகளின் குறுக்கே நீர்மின் திட்டங்களை அமைக்கும் பணியை இந்தியா அதிவேகப்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பாகிஸ்தான், இந்தியா தண்ணீரை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதாக சர்வதேச அளவில் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. பாகிஸ்தானின் இந்த போலிப் பிரசாரத்தை சிந்து நதி நீர் விவகாரங்களுக்கான முன்னாள் இந்திய ஆணையர் பி.கே.சக்சேனா ஆதாரங்களுடன் மறுத்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் அதன் அசல் வடிவத்திலேயே இந்தியாவுக்கு முற்றிலும் அநீதியானது என்றும், இந்தியாவின் மீது ஒருதலைப்பட்சமான கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் அவர் கடந்த மே 9 அன்று எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் சிந்து நதி நீர் அமைப்பில் கிட்டத்தட்ட 80 சதவீதப் பங்கை பாகிஸ்தான் கட்டுப்படுத்துவதையும், இந்தியாவுக்கு வெறும் 20 சதவீதப் பங்கு மட்டுமே கிடைத்துள்ளதையும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
இந்திய அதிகாரியின் இந்த அதிரடி வாதத்தால் நிலைகுலைந்துள்ள பாகிஸ்தானின் தற்போதைய நீர் விவகார ஆணையர் செய்யது முஹம்மது அலி ஷா, பாகிஸ்தானின் ‘டான்’ நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பெருந்தன்மையால் உருவானது அல்ல என்றும், 1948-இல் ஏற்பட்ட கால்வாய் நீர் நெருக்கடியால் உருவான பாதுகாப்பு அச்சத்தின் விளைவு என்றும் அவர் வாதிட்டுள்ளார்.
இந்தியாவின் ‘ரன் ஆஃப் ரிவர்’ (Run of River) நீர்மின் திட்டங்கள் மூலம் மின்சாரம் தயாரிக்க ஒப்பந்தத்தில் அனுமதி இருந்தாலும், ஒரு திட்டத்திற்கு அந்தப் பெயரை வைப்பதாலேயே அது சட்டப்பூர்வமாகிவிடாது என்றும், கீழ்நிலைப் படுகையில் உள்ள பாகிஸ்தானின் உரிமைகளைப் பாதுகாக்கவே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், தனது விவசாயத் தேவைக்காக இந்திய நதிநீரையே முழுமையாக நம்பியிருக்கும் பாகிஸ்தான், இந்தியாவின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது இந்த விவாதங்கள் மூலம் மீண்டும் உறுதியாகியுள்ளது.
