கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஷிந்திகுர்பேட் கிராமத்தில், கிராமத்து விதவை பெண் ஒருவருடன் இருந்த கள்ளத்தொடர்பை தடையின்றித் தொடர்வதற்காக, தனது மனைவியைக் குளிர்பானத்தில் எலி விஷம் கலந்து கொடுத்து கணவன் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இக்கொலை வழக்கில் கணவன் சந்தோஷ் படாயத் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த பெண் சக்குபாய் படாயத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இந்த தம்பதியினருக்கு இடையே, கடந்த சில ஆண்டுகளாக கணவன் சந்தோஷிற்கு மற்றொரு விதவை பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று சக்குபாயை ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்ற சந்தோஷ், அங்கிருந்து திரும்பும் வழியில் குளிர்பானத்தில் எலி மருந்தை (விஷம்) கலந்து கொடுத்துள்ளார். அதனை குடித்த சக்குபாய் மயங்கி விழுந்தவுடன், அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் இது ஒரு சாலை விபத்து போலக் காட்டுவதற்காக, சக்குபாயின் உடலின் மீது தனது மோட்டார் சைக்கிளை ஏற்றி நாடகமாடியுள்ளார்.
அவரே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து விபத்து குறித்து தகவல் கொடுத்துள்ளார். ஆனால், சக்குபாயின் மரணத்தில் சந்தேகமடைந்த போலீசார், உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதில், இது திட்டமிட்ட கொலை என்பது உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியானது. மேலும் இதனையடுத்து சந்தோஷைக் கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்ததுடன், இக்கொலையில் அந்த விதவை பெண்ணுக்குத் தொடர்பு உள்ளதா என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
