உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூர் பகுதியைச் சேர்ந்த 23 வயதான குஷ்பூ என்ற இளம்பெண், பகல் நேரத்தில் மும்பையின் பரபரப்பான சாலைகளில் ஸ்விக்கி (Swiggy) டெலிவரி பார்ட்னராக உணவு டெலிவரி செய்துகொண்டே, இரவு நேரங்களில் உபி போலீஸ் (UP Police) தேர்வுக்குத் தீவிரமாகப் படித்து வரும் விடாமுயற்சி மற்றும் லட்சியக் கதை தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாவில் மிகப்பெரிய புயலையும் சலசலப்பையும் கிளப்பியுள்ளது.
ஐந்து உடன்பிறப்புகள் கொண்ட நடுத்தரக் குடும்ப பின்னணியைச் சேர்ந்த குஷ்பூ, தனது பெற்றோருக்கு முன்கூட்டியே தெரிவிக்காமல், தனக்கான நிதி சுதந்திரத்தைப் பெறவும், தனது லட்சியத்தை அடையவும் தனியாகவே காசிப்பூர் கிராமத்திலிருந்து மும்பை மாநகரத்திற்குப் புலம்பெயர்ந்து வந்துள்ளார்.
தனது அன்றாட வாழ்வாதாரத்தை நடத்திக் கொண்டு தேர்வுக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்காக இந்த உணவு டெலிவரி வேலையைக் கையில் எடுத்த அவர், பகல் முழுவதும் அயராது உழைத்துவிட்டு, மாலை மற்றும் இரவு நேரங்களை முழுமையாகப் படிப்புக்காக அர்ப்பணித்து வருகிறார்.
குஷ்பூவின் இந்த உத்வேகமான லட்சியப் பயணம், ஸ்விக்கி நிறுவனத்தின் சிஇஓ ரோஹித் கபூர் தனது “சாய் பிஸ்கூட்” (Chai Biskoot) வீடியோ தொடர் மூலம் இணையத்தில் பகிர்ந்த போதே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள சிஇஓ ரோஹித் கபூர், “மும்பைக்கு வரும் பெரும்பாலான மக்கள் தங்களது ஊருக்குத் திரும்ப நினைக்க மாட்டார்கள்; ஆனால் குஷ்பூ, ஒரு நாள் தனது சொந்த ஊருக்கு போலீஸ் யூனிஃபார்மில் திரும்பிச் சென்று, அங்குள்ள மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற அசாத்தியமான தெளிவோடு உழைக்கிறார்” என்று பாராட்டியுள்ளார்.
கிக் பொருளாதாரத்தின் (Gig Economy) கொடூரமான சவால்களுக்கு மத்தியிலும், தனது லட்சியத்தை நோக்கி ஓடும் இந்த இளம்பெண்ணின் அதிரடி உழைப்பைக் கண்டு வியந்துள்ள ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள், அவருக்கு தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் இணையத்தில் அள்ளித் தெளித்து வருகின்றனர்.
அதே வேளையில், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது விளம்பரத்திற்காக இத்தகைய தொழிலாளர்களின் போராட்டங்களைப் பயன்படுத்துவதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவர்களுக்கு லேப்டாப் மற்றும் தேர்வுப் பயிற்சிக்கான உதவிகளையும் வழங்கி உண்மையான அதிகாரமளித்தலைச் செய்ய வேண்டும் என்ற விவாதங்களும் தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாக்களில் காட்டுத்தீயாய் பரவி, “எதிர்பார்ப்புகள் இல்லாத இந்தத் துணிச்சலான பெண்ணோட லட்சியம் நிச்சயம் ஜெயிக்கணும் !” என்று இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது.
