இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், முன்னணி நடிகர் யஷ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் ‘டாக்ஸிக்’ திரைப்படம் இம்மாதம் 26-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் பேன் இந்தியா படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
படத்தின் வெளியீட்டு நெருங்கி வருவதால், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் தனியார் செய்தி சேனல் நடத்திய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் யஷ், படத்தின் பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, படத்தில் ஹீரோயின்களுடன் அவர் நெருக்கமாக நடித்த காட்சிகளைப் பார்த்த தனது மனைவி ராதிகா பண்டிட்டின் ரியாக்ஷன் எப்படி இருந்தது என்பது குறித்து அவர் வெளிப்படையாகப் பேசினார்.
இதுகுறித்து நடிகர் யஷ் பேசுகையில், “பொதுவாகத் திரையில் தன் துணை மற்றொருவருடன் நெருக்கமாக நடிப்பதைப் பார்க்கும்போது, எந்தவொரு கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ சிறிய சங்கடம் இருக்கத்தான் செய்யும். இதில் பொய் சொல்ல எதுவுமில்லை, எல்லா பார்ட்னர்களுக்கும் அப்படித்தான் இருக்கும். எனக்கும் கூட இதுபோன்ற காட்சிகளில் நடிப்பது எனது கம்ஃபர்ட் ஜோனை விட்டு வெளியே வந்து செய்வது போலத்தான் இருந்தது. அது எனக்குச் சுலபமான விஷயமல்ல. ஆனால், படத்தின் கதைக்கு அது அவசியமான ஒன்றாக இருந்தது” என்றார்.
மேலும் பேசிய அவர், “திரையில் இதைப் பார்த்து ராதிகா நிச்சயமாகச் சந்தோஷப்பட்டிருக்க மாட்டார். ஆனால், அதற்காக அவர் என் மீது கோபமாக இருக்கிறார் என்று அர்த்தமல்ல. அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மிகவும் வலிமையானது. அவரும் ஒரு நடிகை என்பதால், கேமரா முன்பு நிற்பது கணவன் அல்ல, ஒரு நடிகன் மட்டுமே என்பதை அவர் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறார்” என்று தனது மனைவியின் முதிர்ச்சியான புரிதலைப் பெருமையுடன் பகிர்ந்து கொண்டார்.
இதனிடையே, இப்படத்தில் இடம்பெற்றுள்ள முத்தக் காட்சிகள் மற்றும் ஆபாசக் காட்சிகள் குறித்து இணையத்தில் சில சர்ச்சைகளும் வதந்திகளும் பரவின. இதுகுறித்துத் தெளிவுபடுத்திய நடிகர் யஷ், “நான் யாருக்கும் முத்தம் கொடுக்கவில்லை. எனவே, அதில் ஆபாசக் காட்சிகள் இருப்பதாகச் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், இப்படத்தில் பல முன்னணி நடிகைகள் கதாநாயகிகளாக நடித்துள்ள நிலையில், நடிகை நயன்தாரா நடிகர் யஷ்ஸுக்குச் சகோதரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
