உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் பகுதியில் உள்ள எல்லைக்குட்பட்ட பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் குடிநீர் தொட்டியின் மீது ஏறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பகுதியைச் சேர்ந்த 30 வயதான சுபம் என்பவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே சில நாட்களாகப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதன்காரணமாகக் காசி ராம் காலனியில் தனது தாயார் வீட்டில் வசித்து வந்த மனைவியைச் சந்திப்பதற்காகச் சுபம் அங்கு சென்றுள்ளார்.
அங்கு மனைவியைச் சந்தித்துப் பேசியபோது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், அப்பகுதியில் இருந்த ராட்சத குடிநீர் தொட்டியின் மீது ஏறி அமர்ந்து கொண்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த பொதுமக்களும், அவரது மனைவியும் மற்றும் காவல்துறையினரும் விரைந்து வந்து அவரை கீழே இறங்குமாறு தொடர்ந்து கேட்டுக் கொண்டுள்ளனர். குறிப்பாக அருகில் நின்றிருந்த அவரது ஐந்து வயது சிறுவன் “ப்பா கீழே வா” என்று கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கண் கலங்கச் செய்தது.
சுமார் மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கும் மேலாகத் தொட்டியின் உச்சியிலேயே அமர்ந்திருந்தவரைப் பொதுமக்கள் மற்றும் உள்ளூர் கவுன்சிலர் எவ்வளவோ முயன்றும் கீழே இறக்க முடியவில்லை. இந்நிலையில் எதிர்பாராதவிதமாகத் தண்ணீர் நிறைந்த அந்தத் தொட்டிக்குள் அவர் தவறி விழுந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
