டெல்லி நாடாளுமன்ற மார்ச் மற்றும் போராட்டக் களத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராபிட் ஆக்சன் ஃபோர்ஸ் எனப்படும் விரைவுப் படை வீரர்களின் நீல நிறச் சீருடையை அடிப்படையாகக் கொண்டு, இன்ஃப்ளூயன்சர் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சுமார் 3.75 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ள ஷாத்ர சிங் என்ற பெண் இன்ஃப்ளூயன்சர், வைரலான ஒரு கிண்டல் ஆடியோவிற்கு ஏற்ப பாதுகாப்புப் படை வீரர்களைச் சுட்டிக்காட்டி நடித்த வீடியோ இணையத்தில் வைரலானது.
அந்த வீடியோவில் நீல நிறச் சீருடை அணிந்த வீரர்களை விழித்துத் தவறான தொனியில் செய்கைகள் செய்யப்பட்டிருப்பது பாதுகாப்புப் படையினரின் சீருடையை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி நெட்டிசன்களும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். வீடியோ வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே அது நீக்கப்பட்ட போதிலும், அதற்குள் லட்சக்கணக்கில் பரவியதால் கடுமையானத் மற்றும் விமர்சனங்களை அவர் எதிர்கொள்ள நேரிட்டது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பாதுகாப்புக் காவலர்களின் கௌரவம் மற்றும் இன்ஃப்ளூயன்சர்களின் வரம்பு மீறல்கள் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் பரவித் தீவிரமான விமரிசனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து தனது செயலுக்காக விளக்கம் அளித்துள்ள அந்த இன்ஃப்ளூயன்சர், தான் செய்த தவறுக்காக உடனே அந்தப் பதிவை நீக்கிவிட்டதாகவும், ஆனால் மீம் பக்கங்கள் பணம் பெற்றுக்கொண்டு தன் மீதான வெறுப்பைத் திட்டமிட்டுப் பரப்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தான் செய்த தவறுக்கு அளவுக்கு அதிகமான வசைபாடல்களும் கண்டனங்களும் வருவதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆயினும், பாதுகாப்புப் படையினரின் மரியாதையைக் குலைக்கும் விதமாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருவதால் விவகாரம் தொடர்ந்து பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
