ராஜஸ்தான் மாநிலம் மக்ரானா பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் மூன்றரை வயது சிறுமிக்கு நேர்ந்துள்ள பாலியல் வன்கொடுமைப் புகார் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் இருந்து திரும்பிய சிறுமி தனக்கு ஏற்பட்ட வலியைத் தனது தாயாரிடம் கூறியதோடு, பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்ற கொடுமைகளைப் பற்றித் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாகச் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், மருத்துவர்கள் அளித்த பரிசோதனை முடிவுகள் பாலியல் தொல்லை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதைக் காட்டியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தினர் பர்வட்சார் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தனர். இருப்பினும், காவல்துறையினர் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அப்பகுதி மக்களும், பல்வேறு சமூக அமைப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ ஸ்ரீராம் பின்சார் உள்ளிட்டோரும் பள்ளியின் முன்பு திரண்டு விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் சாலை மறியல் மற்றும் தொடர் போராட்டத்தில் குதித்தனர்.
பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, காவல்துறையினர் இந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்துச் சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைத் தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் மற்றும் இதர சான்றுகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
