தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.ம.மு.க. போட்டியிடும் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சென்னையில் வெளியிட்டார்.

இதன்படி சைதாப்பேட்டை தொகுதியில் செந்தமிழனும், மன்னார்குடியில் எஸ்.காமராஜும், திருச்சி மேற்கில் தொட்டியம் ராஜசேகரனும் களம் காண்கின்றனர். வேட்பாளர் பட்டியலோடு சேர்த்து கட்சியின் தேர்தல் அறிக்கையையும் அவர் வெளியிட்டார்.இந்தத் தேர்தலில் குறிப்பாக தி.மு.க-வின் முக்கிய அமைச்சர்களான கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் மற்றும் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் அ.ம.மு.க வேட்பாளர்கள் நேரடியாக மோத உள்ளனர்.

நாங்குநேரி முதல் திருப்பத்தூர் வரை ஒதுக்கப்பட்டுள்ள 11 தொகுதிகளிலும் தீவிர தேர்தல் பணிகளை அ.ம.மு.க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், இந்த வேட்பாளர் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.