இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி கொண்டு வந்த நீதித்துறை சீர்திருத்தங்கள் குறித்த பொதுவாக்கெடுப்பில் அவருக்குப் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மெலோனி சந்திக்கும் முதல் தேர்தல் தோல்வி இதுவாகும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது எடுத்துள்ள போர் நடவடிக்கை, இத்தாலிய அரசியலில் இத்தகைய அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது சர்வதேச அரங்கில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியின் நீதி அமைப்பில் தலையிடும் வகையில் மெலோனி அரசு கொண்டு வந்த சீர்திருத்தங்களுக்கு எதிராக 54 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் நீதித்துறையில் மாற்றங்களைச் செய்யும் மெலோனியின் முயற்சி தோல்வியடைந்துள்ளது. அடுத்த பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில், இந்தத் தோல்வி மெலோனி அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

மெலோனியின் இந்தத் தோல்விக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்துள்ள போர் முடிவுகளே முக்கியக் காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. யுகோவ்  நடத்திய ஆய்வின்படி, 77 சதவீத மக்கள் மெலோனி அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். ஈரான் – அமெரிக்கப் போர் பதற்றத்தால் எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. ஐரோப்பாவிலேயே மின்சாரத்திற்கு அதிகக் கட்டணம் செலுத்தும் நாடாக இத்தாலி மாறியுள்ளதால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகள் டிரம்பின் போக்கைக் கண்டித்தபோது, மெலோனி மட்டும் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டார். இது இத்தாலிய மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. அமெரிக்காவின் போரினால் தாங்களும் பாதிக்கப்படுவோம் என மக்கள் அஞ்சுகின்றனர். சுமார் 58 சதவீத மக்கள் மத்திய கிழக்குப் பகுதிகளில் உள்ள இத்தாலிய ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடமிருந்து இத்தாலி விலகி இருக்க வேண்டும் என்றும் விரும்புவதாக ‘யூரோ மீடியா’ தெரிவிக்கிறது.

ஈரானின் ‘மினாப்’ பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலை மெலோனி கண்டித்த போதிலும், டிரம்பிற்கு எதிராகப் பேசத் தயங்கியதை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. மெலோனியின் நீதித்துறை சீர்திருத்தங்களை ‘சர்வாதிகாரப் போக்கு’ என வர்ணித்த இடதுசாரி கட்சிகள், டிரம்ப் மீதான மக்களின் கோபத்தை மெலோனிக்கு எதிராகத் திருப்புவதில் வெற்றி பெற்றுள்ளன.