ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில், அந்நாட்டின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை மட்டும் ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். எனினும், மற்ற ராணுவ இலக்குகள் மீது தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க உயரதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும், சர்வதேச வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை கடக்கும் எதிரி நாட்டு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அதிபர் டிரம்ப் திங்களன்று அறிவித்தார். பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். ஆனால், அமெரிக்காவுடன் அத்தகைய பேச்சுவார்த்தை எதையும் நடத்தவில்லை என ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பு குறித்து ‘செமாஃபார்’ (Semafor) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், “ஐந்து நாள் போர் நிறுத்தம் என்பது ஈரானின் எரிசக்தி தளங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஈரானின் ராணுவ தளங்கள், கடற்படை நிலைகள், பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த தொழில்சாலைகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’  என்ற பெயரிலான ராணுவ நடவடிக்கையின் ஆரம்பகட்ட முயற்சிகள் தடையின்றித் தொடரும்” என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் எரிசக்தி தளங்கள் தாக்கப்பட்டால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், இந்த தற்காலிக ஒத்திவைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இருந்தபோதிலும், ராணுவ ரீதியான மோதல்கள் குறையாததால் மத்திய கிழக்கில் போர் மேகங்கள் இன்னும் விலகவில்லை.