இன்றைய காலகட்டத்தில் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது தொடர்பான அதிர்ச்சி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களின் நிம்மதியைக் கெடுத்து வரும் நிலையில், தற்பொழுது காய்கறி வியாபாரி ஒருவர் வாடிப்போன வெள்ளரிக்காய்களைப் பளபளப்பான பச்சை நிற கெமிக்கல் தண்ணீரில் முக்கி எடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி பார்ப்போரை அதிர வைத்துள்ளது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், தரையில் அமர்ந்திருக்கும் ஒரு காய்கறி வியாபாரி, தன்னிடம் இருக்கும் முற்றிலும் நிறம் மாறி, வாடிப் போன பழைய வெள்ளரிக்காய்களை, பக்கத்தில் இருக்கும் அடர் பச்சை நிற கெமிக்கல் திரவத்தில் ஒவ்வொன்றாக முக்கி எடுக்கிறான்; அப்படி முக்கி எடுத்த அடுத்த சில நொடிகளிலேயே அந்த வெள்ளரிக்காய்கள் அனைத்தும் தோட்டம் மார்க்கெட்டில் இருந்து இப்போதுதான் பறித்து வந்தது போல அம்புட்டு பிரஷ்ஷாக மாறி விடுகின்றன.

இதில் கொடுமை என்னவென்றால், தன்னை யாரோ மொபைல் போனில் வீடியோ எடுக்கிறார்கள் என்று தெரிந்தும், கொஞ்சம்கூட பயமோ குற்ற உணர்ச்சியோ இல்லாமல் அந்த ஆசாமி கேமராவைப் பார்த்து நக்கலாகச் சிரித்துக் கொண்டே இந்த அநியாயத்தைச் செய்கிறான்.

இந்த பகீர் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவியதைத் தொடர்ந்து, “இவனெல்லாம் லாபத்துக்காகக் கண் முன்னாடியே மக்களுக்குக் கேன்சரை விற்கிறான்” என்றும், “இனிமேல் பச்சையாகப் பிரஷ்ஷாக இருக்கும் காய்கறிகளைப் பார்த்துக் கூட நாம் நம்ப முடியாது” என்றும் நெட்டிசன்கள் தங்களது கடும் கோபத்தையும் குமுறல்களையும் கமெண்ட்களில் கொட்டித் தீர்த்து வருவதோடு, உணவுக் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.