இந்திய ரயில்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்துப் பலமுறை புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்பொழுது ரயில்வே கேடரிங் (Catering) ஊழியர்கள் சிலர் ஓடும் ரயிலில் இருந்து டன் கணக்கில் கெட்டுப்போன உணவுகளையும் பயன்படுத்திய தட்டுகளையும் அப்படியே தண்டவாளத்தில் வீசி எறியும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி, இணையவாசிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எக்ஸ் (X) வலைதள பக்கத்தில் பகிரப்பட்டுப் பயங்கர வைரலாகி வரும் அந்த வீடியோவில், ரயில் அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது, அதன் வாசலில் நிற்கும் ரயில்வே கேட்டரிங் ஊழியர்கள், தங்களது கைகளில் இருக்கும் கெட்டுப்போன சாப்பாடு, சாம்பார், சாதம் மற்றும் மீந்துபோன உணவுகள் அடங்கிய முழு தட்டுகளையும் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் அப்படியே தண்டவாளத்தின் ஓரங்களில் தூக்கி வீசுகின்றனர்.
भारत से गरीबी और भुखमरी खत्म करने के लिए रेलवे कर्मचारी काफी मेहनत कर रहे हैं।
ट्रेन से जरूरतमंदों को खाने की प्लेट बांटकर नया रिकॉर्ड भी बनाया है। इन्हें रेल मंत्री सम्मानित कब करेंगे? इसका इंतजार रहेगा। pic.twitter.com/IGRTTAn02I— Arvind Sharma (@sarviind) June 10, 2026
இதில் கொடுமை என்னவென்றால், பயணிகளை எப்போதும் குப்பைகளைத் தொட்டியில் போடுமாறு அறிவுறுத்தும் ரயில்வே நிர்வாகத்தின் ஊழியர்களே, இப்படித் தண்டவாளங்களை அசிங்கப்படுத்தி அநாகரீகமாக நடந்து கொள்வது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது.
இந்தச் செயலைக் கண்டு ஆத்திரமடைந்த நெட்டிசன்கள், “சாப்பாட்டை இப்படி வீணடிப்பதற்குப் பதிலாக ஏழை எளிய மக்களுக்குக் கொடுத்திருக்கலாம்” என்றும், “ரயிலில் குப்பைத் தொட்டி வசதியே இல்லையா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளதோடு, சுகாதார விதிகளை அடியோடு மீறிய அந்த ஊழியர்கள் மீது இந்திய ரயில்வே வாரியம் உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.
