மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் மீதான தாக்குதலால் உலக நாடுகளின் கவனம் திசை திரும்பியுள்ள நிலையில், தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சீனா தனது அத்துமீறல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, சர்ச்சைக்குரிய ‘ஸ்கார்பாரோ ஷோல்’ பகுதியில் பிலிப்பைன்ஸ் மீனவர்களை வெளியேறுமாறு சீனக் கடலோரக் காவல்படை நேரடி வானொலிமூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படையின் (PCG) செய்தித் தொடர்பாளர் அட்மிரல் ஜே. தரிலா இதுகுறித்துக் கூறுகையில், “எங்கள் நாட்டு எல்லைக்குள் சீனக் கடலோரக் காவல்படை முதன்முறையாக ‘கிளியரிங் ஆபரேஷன்’ (பகுதியைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கை) என்ற பெயரில் வானொலி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வான்வழி ரோந்துப் பணியின் போது இந்த அத்துமீறல் கண்டறியப்பட்டது” என்று தெரிவித்தார்.
பிலிப்பைன்ஸ் வான்வழி ரோந்துப் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வில், ஸ்கார்பாரோ ஷோல் பகுதியைச் சுற்றி 6 சீனக் கடலோரக் காவல்படைக் கப்பல்கள், 20 சீன கடல்சார் ஆயுதப்படை படகுகள் , 1 சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) போர்க்கப்பல் ஆகியவை நிலைநிறுத்தப்பட்டிருப்பது உறுதியானது.
BREAKING:
Major confrontation between China and the Philippines near the Scarborough Shoal.
The Philippine Coast Guard (PCG) and Bureau of Fisheries and Aquatic Resources (BFAR) have deployed 2 PCG vessels and 5 fishery patrol vessels to the shoal after Chinese Coast Guard… pic.twitter.com/iEw9cIbPq1
— Visegrád 24 (@visegrad24) March 24, 2026
சீனக் கடலோரக் காவல்படை வானொலி மூலம் “பாதுகாப்பு..! பாதுகாப்பு..!” என்று எச்சரித்து, குறிப்பிட்ட நான்கு அட்சரேகைகளை அறிவித்தது. அந்தப் பகுதிக்குள் இருக்கும் அனைத்துப் படகுகளும் காலை 6 மணிக்குள் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், மார்ச் 22-23 தேதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட பிலிப்பைன்ஸ் மீனவர்களின் படகுகளைச் சீன அதிவேகப் படகுகள் சுற்றி வளைத்துத் துன்புறுத்திய வீடியோ ஆதாரங்களையும் பிலிப்பைன்ஸ் வெளியிட்டுள்ளது.
சீனாவின் இந்த மிரட்டலைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் அரசு தனது 2 கடலோரக் காவல்படைக் கப்பல்களையும், 5 ரோந்துப் படகுகளையும் அந்தப் பகுதிக்கு அனுப்பியுள்ளது. அங்குள்ள மீனவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கியதோடு, அவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்கப் பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளது.
தென் சீனக் கடலில் அமைந்துள்ள இந்தப் பகுதி பிலிப்பைன்ஸ், சீனா மற்றும் தைவான் ஆகிய நாடுகளுக்கு இடையே சர்ச்சைக்குரிய இடமாக உள்ளது. பிலிப்பைன்ஸின் லுசான் தீவிலிருந்து 220 கி.மீ தொலைவிலும், சீனாவின் ஹைனான் தீவிலிருந்து 800 கி.மீ தொலைவிலும் இது அமைந்துள்ளது. மேலும் பொருளாதார ரீதியாகவும், உத்தி ரீதியாகவும் மிக முக்கியமான இந்தப் பகுதியில் மீன் வளம் அதிகம் என்பதால், அதனைக் கைப்பற்ற சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது.
