ஈரான் நாட்டுடனான போர் பதற்றத்தைத் தணிக்கப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் எனத் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் நீர்ச்சந்தியின் கட்டுப்பாடு குறித்துப் பேசிய கருத்தை ஈரான் சமூக வலைதளங்களில் கடுமையாகக் கிண்டல் செய்துள்ளது. அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் நீர்ச்சந்தியின் கட்டுப்பாடு குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், “இந்த நீர்ச்சந்தி கூட்டுத் தலைமையின் கீழ் இருக்கும். ஒருவேளை நானும், ஈரானின் அடுத்த உயர்ந்த மதத் தலைவர் இணைந்து இதனைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்போம்” என்று தெரிவித்தார்.
டிரம்பின் இந்த கருத்தை ஈரான் அரசு பகிரங்கமாக எள்ளி நகையாடியுள்ளது. தென்னாப்பிரிக்காவிற்கான ஈரான் தூதரகம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் (X) ஒரு சுவாரஸ்யமான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது. அதில், காரின் ஸ்டீயரிங் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்க, அருகில் அமர்ந்திருப்பவர் விளையாட்டான ஒரு போலி ஸ்டீயரிங்கை வைத்திருப்பது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. இதன் மூலம், ஹார்முஸ் நீர்ச்சந்தியின் உண்மையான அதிகாரம் ஈரானிடம் மட்டுமே உள்ளது என்பதையும், அமெரிக்கா வெறும் பாசாங்கு செய்வதையும் ஈரான் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளது.
The Strait of Hormuz will be controlled by me and the Ayatollah😎😁 pic.twitter.com/IxIgo1Pn6S
— Iran Embassy SA (@IraninSA) March 23, 2026
இதுமட்டுமின்றி, ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க போர்க்கப்பல்கள் பின்வாங்கியதாகவும், இதனைப் பார்த்து டிரம்ப் அச்சமடைந்துள்ளதாகவும் மற்றொரு வீடியோவை வெளியிட்டு ஈரான் வம்புக்கு இழுத்துள்ளது. மேலும் சர்வதேச எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீர்ச்சந்தி மீது உரிமை கோருவதில் அமெரிக்கா – ஈரான் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வரும் சூழலில், டிரம்பின் இந்த கருத்து தற்போது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
