தன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை மட்டுமே காரணம் காட்டி விவாகரத்து கோர முடியாது என்றும், ஒரு மனைவி தனது சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள நீதிமன்றத்தையோ அல்லது காவல்துறையையோ நாடுவது கணவனுக்கு இழைக்கப்படும் மனரீதியான கொடுமை (Mental Cruelty) என்ற வரம்பிற்குள் வராது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை மிக முக்கியமான ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
நீதிபதி பி. வடமலை அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், தங்களுக்குள் திருமணம் முடிந்து கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரிந்து வாழ்வதைக் காரணம் காட்டியும், மனைவி தன் மீது பொய் புகார் அளித்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கணவர் தரப்பில் விவாகரத்து கோரி மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், கணவர் மற்றும் அவரது வீட்டார் செய்த வரதட்சணை கொடுமை மற்றும் உடல்ரீதியான தாக்குதல்களுக்குப் பிறகே தான் வேறு வழியின்றி போலீசாரை அணுகியதாக மருத்துவ ஆதாரங்களுடன் மனைவி தரப்பில் வலுவான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இருதரப்பு ஆவணங்களையும் தீர விசாரித்த நீதிமன்றம், மனைவி கொடுத்த புகார் முற்றிலும் பொய்யானது என்பதை நிரூபிக்கக் கணவர் தரப்பில் எந்தவொரு தகுந்த சாட்சிகளோ அல்லது ஆதாரங்களோ சமர்ப்பிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியது.
மேலும், கணவரின் வேலைக்கோ அல்லது அவரது சமூகப் பெயருக்கோ களங்கம் விளைவிக்கும் நோக்கில் இந்த புகார்கள் அளிக்கப்படவில்லை என்பதால், கீழ் நீதிமன்றங்கள் விவாகரத்து வழங்க மறுத்த உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்றம் முழுமையாக உறுதி செய்து கணவனின் மனுவைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
