காஷ்மீரின் புகழ்பெற்ற தால் ஏரியில் படகில் வந்த பழ வியாபாரி ஒருவர், சுற்றுலாப் பயணிகளிடம் ஒரு பிளேட் ‘புரூட் சாட்’ பழக்கலவைக்கு 1,000 ரூபாய் விலை கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
மேலும் ஷிகாரா படகில் அமர்ந்து ஏரியின் அழகை ரசித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளிடம், அன்னாசி, மாம்பழம், ஆப்பிள் எனப் பல வகையான புதிய பழங்கள் இதில் இருப்பதாகக் கூறி அந்த வியாபாரி இவ்வளவு பெரிய தொகையைக் கேட்டுள்ளார்.
இதனால் ஒரு பிளேட் பழக்கலவைக்கு இந்த விலை மிக அதிகம் என்று சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, இரு தரப்பிற்கும் இடையே நீண்ட பேரம் பேசப்பட்டது. இறுதியில் அந்த வியாபாரி விலையைக் குறைத்து, ஒரு பிளேட் 800 ரூபாய்க்குத் தர சம்மதித்தார். விலை குறைந்ததும் அந்த பெண் சுற்றுலாப் பயணி, மொத்தம் 5 பிளேட் புரூட் சாட் வாங்க சம்மதிப்பதோடு அந்த வீடியோ முடிகிறது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தால் ஏரி போன்ற சுற்றுலாத் தலங்களில் உண்மையாகவே பொருட்களின் விலை இவ்வளவு அதிகமா, அல்லது சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றி கூடுதல் பணம் வசூலிக்கப்படுகிறதா என்ற கேள்வியையும், விவாதத்தையும் இது சமூக வலைதளப் பயனர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
