ஓமன் நாட்டு கடற்பகுதியில், ‘எம்.டி செலிஸ்டியல்’ என்ற எண்ணெய் கப்பலில் பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த 35 வயதான நிஷாந்த் உயிர்தநாதன் என்ற இந்திய மாலுமி கடுமையான உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் 11 அன்று உயிரிழந்தார்.

மேலும் ஜூன் 8 முதலே அவரது உடல்நிலை மோசமடைந்திருந்த நிலையிலும், அப்பகுதியில் நிலவும் பிராந்திய பதற்றங்கள் மற்றும் தகவல்தொடர்பு முடக்கம் காரணமாக அவருக்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவிகளோ அல்லது அவசர மீட்பு நடவடிக்கைகளோ வழங்கப்படவில்லை என்று கப்பலின் ஊழியர்களும் இந்திய மாலுமிகள் சங்கமும் குற்றம் சாட்டியுள்ளனர்.

“>

மேலும், கப்பல் நிர்வாகம் தங்களைப் புறக்கணிப்பதாகக் கூறி கப்பலின் கேப்டன் ராஜேந்திர யாதவ் வீடியோ ஒன்றை வெளியிட்டு உதவிகோரியுள்ளார். இந்த சோகமான சம்பவத்திற்குப் பிறகு, கப்பலில் சவக்கிடங்கு அல்லது முறையான குளிரூட்டும் வசதிகள் இல்லாததால், நிஷாந்தின் உடல் அழுகத் தொடங்கியது.

இதனால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், உடலின் சிதைவைத் தடுப்பதற்காக வேறு வழியின்றி குளிர்ந்த குடிநீர் பாட்டில்களை உடலைச் சுற்றி அடுக்கி வைத்துப் பாதுகாக்கும் அவல நிலை ஏற்பட்டது. இது தங்களுக்குப் பெரும் சுகாதார ஆபத்தை ஏற்படுத்துவதாக மாலுமிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தற்போது, மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, கப்பல் நிர்வாகத்துடன் இணைந்து நிஷாந்தின் உடலை விரைவில் தாயகத்திற்கு கொண்டு வர தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருவதாக உறுதி அளித்துள்ளது.