உத்தரப்பிரதேசத்தில் குற்றவாளி ஒருவர் போலீசாரிடம் வினோதமான கோரிக்கை வைத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பொதுவாக குற்றவாளிகள் சிறைக்குச் செல்ல பயப்படுவார்கள், ஆனால் இந்த நபர் உரை மாவட்ட சிறை தனக்கு பிடிக்கவில்லை என்றும், தன்னை சென்ட்ரல் ஜெயிலுக்கு மாற்றுமாறும் போலீசாரிடம் அடம்பிடித்துள்ளார்.
மேலும் “உரை ஜெயில் ரொம்ப மட்டமாக இருக்கிறது, மூன்று முறை அங்கு சென்றுவிட்டேன், அங்கு ஒரு மஜாவே இல்லை; அதனால் என்னை சென்ட்ரல் ஜெயிலுக்கு அனுப்புங்கள் சார்” என்று அவர் கெஞ்சும் வீடியோவைப் பார்த்து காவல்துறையினரே ஒரு நிமிடம் தலைசுற்றிப் போய்விட்டனர். கைது செய்யப்பட்ட அந்த நபர், காவல்துறையினரின் வாகனத்தில் அமர்ந்துகொண்டு எந்தவொரு பயமும் இல்லாமல் மிகவும் எதார்த்தமாக இந்த கோரிக்கையை முன்வைக்கிறார்.
இந்நிலையில் சிறைச்சாலையின் வசதிகளை ஒரு ஹோட்டல் தரம் போல அவர் விமர்சிப்பதைக் கேட்டு அங்கிருந்த போலீசார் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தனர். இந்த விசித்திரமான மற்றும் வேடிக்கையான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, “இப்படியெல்லாம் கூடவா யோசிப்பாங்க!” என நெட்டிசன்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
