தமிழ் மற்றும் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் வலம் வந்த மோகன் சர்மா, ஒரு காலத்தில் போயஸ் கார்டனில் பிரம்மாண்டமான சொந்த வீட்டை வைத்து கோலோச்சியவர். புனே திரைப்படக் கல்லூரியில் பயின்ற முதல் தென்னிந்தியரான இவர், ரஜினி, கமல், விஜய், அஜித் எனப் பல முன்னணி நடிகர்களின் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். ஆனால், தற்போதைய சூழலில் இவரின் வாழ்க்கை முற்றிலும் மாறி, கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் எளிய முறையில் வசித்து வருவது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்ததுடன் பல சீரியல்களிலும் முத்திரை பதித்த மோகன் சர்மாவின் தனிப்பட்ட வாழ்க்கை மிகுந்த துயரங்கள் நிறைந்ததாக அமைந்துள்ளது. பிரபல நடிகை லட்சுமியைத் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்ற இவர், இரண்டாவது திருமண வாழ்க்கையிலும் பல்வேறு சோதனைகளைச் சந்தித்துள்ளார்.
குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சறுக்கல்கள் மற்றும் வெளிப்படுத்த முடியாத பல தனிப்பட்ட துயரங்கள் காரணமாகத் தன்னிடம் இருந்த போயஸ் கார்டன் இல்லத்தை விற்க நேரிட்டதாகவும், அங்கும் பல்வேறு சிக்கல்கள் தன்னை வாட்டியெடுத்ததாகவும் அவர் மனவேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
முதுமை வாட்டியெடுத்த நிலையில் கவனிப்பாரற்று நின்ற இவரைக் ரோட்டரி கிளப் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீட்டு கும்மிடிப்பூண்டியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துப் பராமரித்து வருகின்றனர். தங்குமிடமும் உணவும் கிடைத்தாலும், மருத்துவச் செலவுகளுக்கும் மருந்து மாத்திரைகளுக்கும் பணம் இல்லாமல் தவித்து வந்த இவரது நிலையை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து உதவியுள்ளார். எஞ்சியுள்ள தனது வாழ்நாளைக் கழிக்கத் திரையுலகைச் சேர்ந்த நல்ல உள்ளங்கள் தமக்கு உதவ முன்வர வேண்டும் என்று மோகன் சர்மா வைத்துள்ள கோரிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
