தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாகக் களமிறங்கி நடித்துள்ள எதிர்பார்க்கப்பட்ட ‘DC’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் ட்ரெலர் தற்போது வெளியாகியுள்ளது. திறமையான இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், லோகேஷ் கனகராஜ் ‘தேவதாஸ்’ என்ற கதாபாத்திரத்திலும், அவருக்கு ஜோடியாக ‘சந்திரா’ என்ற வேடத்தில் நடிகை வாமிகா கபியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடித்துள்ளனர்.

பிரபல சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியாகி இருந்த 15 பாடல்கள் அடங்கிய பிரம்மாண்ட ஆல்பம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த டிரெலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.

வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெலரில், அனிருத்தின் மிரட்டலான பின்னணி இசையுடன் கூடிய அதிரடியான மற்றும் வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக முழுமையான அவதாரம் எடுத்துள்ள இந்தப் படம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.