பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் குறித்த முந்தைய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள புதிய பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறி மகளிர் ஆணையத்திலும் காவல் துறையிலும் அளித்த புகார்களை அடுத்து இவிவகாரம் தீவிரமடைந்தது. தங்களுக்குப் பிறந்த குழந்தைக்கு முறையான டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட்டால் உண்மையை ஏற்றுக்கொள்வதாக ரங்கராஜ் தரப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அறிவியல் பூர்வமான டி.என்.ஏ பரிசோதனையில், ஜாய் கிரிசில்டாவின் கைக்குழந்தை மாதம்பட்டி ரங்கராஜின் மகன் என்பது சான்றுகளுடன் உறுதியானது. இந்தச் சோதனையின் முடிவுகள் வெளியானதை அடுத்து, அந்தப் பச்சிளம் குழந்தையைத் தனது சொந்த மகனாக ஏற்றுக்கொள்வதாக ரங்கராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், அந்தச் சின்னஞ்சிறு குழந்தைக்கு ஒரு தந்தையாகச் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த ஆறு மாதங்களாகவே தான் அன்போடு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் குழந்தை ராகாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர், இனி வரும் தனது வாழ்நாள் முழுவதும் குழந்தையின் நலனுக்காகவும் எதிர்காலத்திற்காகவும் முழுப் பொறுப்புடன் துணை நிற்பேன் என்றும் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு வந்த இந்த விவகாரத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மனம் திறந்து தனது மகனை ஏற்றுக் கொண்டுள்ள இந்தச் செய்தி தற்போது சினிமா வட்டாரத்திலும் இணைய உலகிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
