கர்நாடக மாநிலம் துமகூரு பகுதியில் உள்ள பிரபல நகைக் கடை ஒன்றில், சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மற்றும் வைர நகைகள் திடீரென மாயமாகின. கடையின் சேமிப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த நகைகள் ஒவ்வொன்றாகக் காணாமல் போனதால், கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். கடையில் பலத்த பாதுகாப்பு இருந்தும் நகைகள் மர்மமான முறையில் காணாமல் போனது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, நகைகள் எவ்வாறு மாயமாயின என்பதைக் கண்டறிய கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளை ஊழியர்கள் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது அதில் பதிவாகியிருந்த காட்சியைப் பார்த்து அவர்கள் ஒட்டுமொத்தமாக உறைந்துபோயினர். நகைகளைத் திருடிச் சென்றது மனிதர்கள் யாரும் இல்லை; ஒரு கில்லாடி எலி தான் அந்தத் திருட்டை அரங்கேற்றியுள்ளது என்பது சிசிடிவி காட்சி மூலம் அம்பலமானது.

அந்த எலி, மிக லாவகமாக ஒவ்வொரு நகையாகத் தன் வாயில் கவ்விக்கொண்டு சுவரோரம் இருந்த தனது வளைக்குள் இழுத்துச் செல்வது சிசிடிவியில் தெளிவாகப் பதிவாகியிருந்தது. நகைகள் மாயமானதன் பின்னணியில் உள்ள ‘முக்கிய குற்றவாளி’ எலிதான் என்பதை உறுதி செய்த ஊழியர்கள், உடனே அது சென்று ஒளிந்த வளை இருக்கும் பாதையைக் பின் தொடர்ந்தனர்.

தொடர்ந்து அந்த எலியின் வளையைத் தோண்டிப் பார்த்தபோது, அதற்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த 10 வைர மோதிரங்கள் மற்றும் 3 தங்க சங்கிலிகள் அப்படியே பத்திரமாக இருப்பது கண்டறியப்பட்டது. வளைக்குள் இருந்து அனைத்து நகைகளும் மீட்கப்பட்டதை அடுத்து, நகைக் கடை உரிமையாளரும் ஊழியர்களும் பெருமூச்சு விட்டனர். தற்போது இந்த விசித்திரமான சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.