பெங்களூருவில் சந்தேகத்தின் பேரில் லிவ்-இன்-ரிலேஷன்ஷிப் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்த காதலியைக் காதலன் சமையலறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா குமாரி ராய் என்ற பெண், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரும், அதே மாநிலத்தைச் சேர்ந்த இவருடைய காதலன் லக்வி சிங் என்பவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர்.
இதனால் இவர்கள் இருவரும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் பெங்களூரு, ஹுலிமாவூ பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒன்றாகத் தங்கத் தொடங்கியுள்ளனர். கிருஷ்ணா குமாரிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக லக்வி சிங் தொடர்ந்து சந்தேகப்பட்டு வந்துள்ளார்.
இதனால் இவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதமும், சண்டையும் ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு இவர்களுக்கிடையே ஏற்பட்ட கடுமையான தகராறில், ஆத்திரமடைந்த லக்வி சிங் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து கிருஷ்ணா குமாரியை கொடூரமாகக் குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த ஹுலிமாவூ காவல் துறையினர், லக்வி சிங்கை கைது செய்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
