மேற்கு ஆசியப் போர் சூழலால் ஏற்படப்போகும் பாதிப்புகளை எதிர்கொள்ள, கொரோனா காலத்தைப் போல மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். பிரதமரின் இந்த கருத்திற்குப் பதிலடி கொடுத்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பாதிப்புகளுக்குத் தயாராக இருக்க வேண்டியது மக்களா அல்லது ஒன்றிய அரசா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் மீது சுமத்தக் கூடாது என்றும் அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.போர்ச் சூழல் தீவிரமடைந்த உடனேயே, வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனப் பிரதமருக்குக் கடிதம் எழுதியதை முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தியும், மக்களின் நலனைக் காக்க ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை என்றும் அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.ஒன்றிய அரசின் பதிலுக்காகக் காத்திராமல், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.
குறிப்பாக, உணவு உற்பத்தித் தொழில்களுக்கு மின்சார மானியம், சிறு குறு நிறுவனங்களுக்குக் கடன் உதவி மற்றும் உழவர் சந்தைகளில் விவசாயிகள் தடையின்றி வியாபாரம் செய்ய அனுமதி போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இக்கட்டான சூழலில் பொறுப்புள்ள மாநில அரசாகத் தமிழ்நாடு செயல்பட்டு வரும் நிலையில், ஒன்றிய அரசின் நடவடிக்கை என்ன என்பதே தனது கேள்வி என்று அவர் பதிவிட்டுள்ளார்.
