ரஷ்ய-உக்ரைன் போரில் உயிரிழந்த மற்றும் காணாமல் போன ரஷ்ய ராணுவ வீரர்களை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் டிஜிட்டல் வடிவில் மீண்டும் உயிர்ப்பிக்கும் புதிய வழக்கம் ரஷ்யாவில் வேகமாக அதிகரித்து வருகிறது.

மேலும் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் தங்களின் பழைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கிரியேட்டர்களிடம் வழங்கி, அவர்கள் மீண்டும் வீட்டிற்குத் திரும்புவது போன்றோ, குடும்பத்தினரைக் கட்டிப்பிடிப்பது போன்றோ அல்லது சொர்க்கத்திலிருந்து பேசுவது போன்றோ மிகவும் தத்ரூபமான போலி வீடியோக்களை உருவாக்கி வருகின்றனர்.

இதனால் கத்யா ஜின் மற்றும் அன்னா கொராப்ளேவா போன்ற ரஷ்ய பிளாக்கர்கள் இந்த சேவையை 200 முதல் 10,000 ரூபிள் வரையிலான கட்டணத்தில் வழங்கி வருகின்றனர். தங்களின் அன்பிற்குரியவர்களைக் கடைசியாக ஒருமுறை பார்த்து விடைபெறுவது போன்ற உணர்வைத் தருவதால், இது தங்களுக்குப் பெரும் மன ஆறுதலாக இருப்பதாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கருதுகின்றனர்.

இருப்பினும், இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து உலகளாவிய ரீதியில் பல கடுமையான விவாதங்களும் கவலைகளும் எழுந்துள்ளன. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இத்தகைய AI வீடியோக்கள் மக்களின் துயரத்தைக் குறைக்கிறதா அல்லது அவர்களின் மன வேதனையை மேலும் நீடிக்கச் செய்கிறதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

மேலும், இந்த வீடியோக்களில் உக்ரைன் போரினால் ஏற்பட்ட அழிவுகள் மறைக்கப்பட்டு, வீரர்கள் வெறும் தேசபக்தி நாயகர்களாக மட்டுமே சித்தரிக்கப்படுவதால் உக்ரைன் தரப்பிலிருந்து இதற்குப் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அதே நேரத்தில், மற்றவர்களின் துயரத்தையும் இழப்பையும் ஒரு சில AI கிரியேட்டர்கள் பணமாக்குவதாகவும் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.