தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பின் நிலவி வரும் அரசியல் மாற்றங்களுக்கு இடையே, அதிமுகவின் மிக முக்கிய மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான பி. பெஞ்சமின் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்த அவர், அதன் தொடர்ச்சியாகத் தற்பொழுது திமுகவின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்துச் சால்வை அணிவித்து வாழ்த்துப் பெற்றுள்ளார்.

முன்னதாக அதிமுகவில் திருவள்ளூர் மத்திய கிழக்கு மாவட்டச் செயலாளராகவும், கடந்த ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் பள்ளி கல்வித்துறை மற்றும் ஊரகத் தொழில்துறை அமைச்சராகவும் வலம் வந்த பெஞ்சமின், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

தேர்தலுக்குப் பின் அதிமுகவிற்குள் ஏற்பட்ட உள்கட்சி மோதல்களால் அவரது மாவட்டச் செயலாளர் பதவி எடப்பாடி பழனிசாமியால் பறிக்கப்பட்ட நிலையில், “மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்யவே நான் திமுகவில் இணைந்தேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அதிமுகவின் முக்கிய மாஜிக்கள் பலரும் அடுத்தடுத்து மாற்று முகாமிற்குத் தாவிக் கொண்டிருக்கும் வேளையில், பெஞ்சமின் திமுகவில் இணைந்து உதயநிதியை நேரில் சந்தித்துள்ள இந்த நிகழ்வு தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.