தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜல்லிக்கட்டு வீரர்களுக்காகப் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் சாலப்பாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் போது எதிர்பாராதவிதமாக உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு ₹10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
மேலும், காயமடையும் வீரர்களின் மருத்துவச் சிகிச்சைக்காக ₹2 லட்சம் வழங்கப்படுவதோடு, போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் காளைகள் ஆகிய இரு தரப்பினருக்கும் அரசு சார்பில் காப்பீடு (Insurance) வசதி செய்து தரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், தற்போதுள்ள ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்யப்போவதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அரசாணை வழங்கப்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு அரசின் சார்பில் ₹5 லட்சம் மானியம் வழங்கப்படும் என்றும், வீரர்களின் நலன் காக்கத் தனி நல வாரியம் அமைக்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார். திமுக அரசு ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், அதற்குப் போட்டியாக அதிமுக வெளியிட்டுள்ள இந்த மெகா நலத்திட்ட அறிவிப்புகள் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
