தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகியதற்கு நயினார் நாகேந்திரனுடனான மோதல் மட்டுமே காரணம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு புதிய அரசியல் பின்னணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுபவர்களுக்குத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு (சீட்) மறுக்கப்படும் என்பது ஒரு எழுதப்படாத விதியாகப் பார்க்கப்படுகிறது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அண்ணாமலை, அந்த வாய்ப்பு நழுவிவிடக் கூடாது என்பதற்காகவே இந்தப் பொறுப்பிலிருந்து விலகியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

​ஆரம்பத்தில் நயினார் நாகேந்திரனுக்கும் அண்ணாமலைக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளே விலகலுக்குக் காரணம் என்று பேசப்பட்டாலும், இந்தத் தேர்தல் சீட் விவகாரமே மிக முக்கியமான உள்ளர்த்தமாகத் தெரிகிறது. கட்சியின் மேலிட முடிவுகளுக்கு ஏற்பத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் அதே வேளையில், சட்டமன்றத் தேர்தல் களம் காண்பதற்கானத் தனது கனவை நனவாக்கவே அவர் இந்தத் தந்திரமான நகர்வை மேற்கொண்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இந்த விவகாரம் தற்போது தமிழக பாஜக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.