கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை 15% வரை அதிரடியாகச் சரிந்ததைத் தொடர்ந்து, முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் தங்கக் காசுகள் (Coins) மற்றும் பிஸ்கட்டுகளை ஆர்வத்துடன் வாங்கிச் சேமித்தனர். தற்போது விலையில் மாற்றம் ஏற்பட்டு ஏற்றம் காணப்படுவதால், அவசரத் தேவைக்காக இந்தத் தங்கத்தை வங்கிகளில் அடமானம் வைத்து ‘நகை கடன்’ பெறப் பலரும் முயற்சித்து வருகின்றனர். ஆனால், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விதிமுறைகளின்படி, தங்கக் காசுகள் அல்லது பிஸ்கட்டுகளை அடமானமாகப் பெற்றுக்கொண்டு வங்கிகள் கடன் வழங்க அனுமதி இல்லை என்ற தகவல் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​வங்கிகளுக்குத் தங்கம் ஏந்திக் கொண்டு சென்ற மக்கள், இந்தத் தொழில்நுட்பக் காரணங்களால் கடன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. சேமிப்பு மற்றும் முதலீடு என்ற நோக்கில் தங்கம் வாங்குவது ஒருபுறம் இருந்தாலும், ஒரு அவசர காலத்திற்கு வங்கிக் கடனாக மாற்றுவதற்கு ஆபரண நகைகளே (Jewellery) உகந்ததாக இருக்கின்றன. எனவே, வருங்காலத்தில் முதலீடு செய்பவர்கள், அவசரத் தேவைகளையும் கருத்தில் கொண்டு தங்கத்தைக் காசுகளாக வாங்குவதை விட, நகைகளாக வாங்குவதே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் என நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்துகின்றனர்.