உத்தராகண்ட் மாநிலத்தில் நான்கு வயது சிறுவன் ஒருவன் இருமலுக்காகக் கொடுக்கப்பட்ட ‘கோல்ட்ரிஃப்’ (Coldriff) என்ற மருந்தை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. அந்த மருந்தைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே சிறுவனின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழக்கத் தொடங்கியதோடு, அவர் நீண்ட நாட்களாகக் கோமா நிலையில் உயிருக்குப்போராடி வந்துள்ளார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்தப் பிஞ்சு உயிர் பிரிந்திருப்பது, மருந்துப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த மிகப்பெரிய அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கோரச் சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த மருந்தில் உயிருக்கு ஆபத்தான வேதிப்பொருட்கள் கலந்துள்ளனவா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே சில இருமல் மருந்துகள் தொடர்பாகப் பல புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது ஒரு குழந்தையின் உயிர் பறிபோயிருப்பது பெற்றோர்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவர்களின் பரிந்துரை இன்றி மருந்துகளை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட அந்த மருந்து குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
