தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இடையிலான மோதல் இப்போது ‘பேனர்’ அரசியலாக உருவெடுத்துள்ளது. “ஆட்சிக்கு வரும் முன்னரே தவெகவினர் அதிகாரிகளை மிரட்டுகிறார்கள்” என்ற குற்றச்சாட்டுக்கு அக்கட்சியின் முக்கிய நிர்வாகி அருண்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். தவெகவினர் யாரையும் மிரட்டவில்லை என்றும், மாறாக திமுக அரசுதான் அதிகாரிகளைத் தூண்டிவிட்டு தங்களை மிரட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தவெக சார்பில் வைக்கப்படும் பேனர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதோடு, ஒருவேளை அனுமதி பெற்று வைத்தாலும் அவற்றை உடனடியாகக் கிழித்து அராஜகம் செய்வதாக அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

​திமுக அரசு அதிகார பலத்தைப் பயன்படுத்தித் தவெகவின் வளர்ச்சியைத் தடுக்க நினைப்பதாகக் கூறிய அருண்ராஜ், கேள்விக் கேட்பதெல்லாம் மிரட்டுவதாகாது என்று விளக்கம் அளித்துள்ளார். “நாங்கள் எங்கு பேனர் வைத்தாலும் முட்டுக்கட்டை போடுகிறார்கள், ஜனநாயக ரீதியாகச் செயல்பட விடாமல் அதிகாரிகளை வைத்து எங்களை மிரட்டுவது திமுக அரசுதான்” என்று அவர் தனது பேட்டியில் வெளிப்படையாகச் சாடியுள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில், தவெக மற்றும் திமுக ஆதரவாளர்களிடையே சமூக வலைதளங்களிலும் நேரடியாவும் இந்த விவகாரம் பெரும் காரசாரமான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.