தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குறுதிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
அதன்படி, முதியோர்களுக்கான ஓய்வூதியம் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களின் சிகிச்சைக்காக 2 லட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என்பதும் இந்த இரண்டாம் கட்ட அறிக்கையில் முக்கிய இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் குலவிளக்கு திட்டம், ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் மற்றும் வீடில்லாதவர்களுக்கு அம்மா இல்லம் திட்டம் மூலம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தருதல் போன்றவை இடம்பெற்றிருந்தன.
கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துதல் மற்றும் 5 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்குதல் போன்ற அறிவிப்புகளையும் எடப்பாடி பழனிசாமி மீண்டும் நினைவு கூர்ந்தார். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
