சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் புரிதல் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அதிமுகவைப் பொறுத்தவரை சாத்தியமான வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வருவதாகவும், முந்தைய அதிமுக தலைவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். கூட்டணி குறித்த குழப்பங்களுக்குப் பதிலளித்த அவர், அதிமுக தலைமையிலான கூட்டணிக்குத் தான் தலைமை என்பதை அமித்ஷா ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டதாகக் குறிப்பிட்டார்.

விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய அவர், விஜய்க்குப் பொது வெளியில் நிலவும் அரசியல் சூழல்கள் குறித்தோ அல்லது கூட்டணிகள் குறித்தோ போதிய புரிதல் இல்லை என்று விமர்சித்தார். ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற விவகாரங்களை அறிந்திருக்க வேண்டும் என்றும், எதையும் அறியாமல் விஜய் பேசி வருவதாகவும் அவர் சாடினார்.

அதிமுகவை ஊழல் கட்சி என்று விஜய் விமர்சிப்பது ஏற்புடையதல்ல என்றும், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை முன்னுதாரணமாகக் கொள்ளும் விஜய், அதே கொள்கையில் வழிநடக்கும் அதிமுகவை எதன் அடிப்படையில் விமர்சிக்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார். ஊழல் குற்றச்சாட்டுகளைத் தான் சட்டப்படி எதிர்கொண்டு வருவதாகவும், அதிமுகவின் மீது களங்கம் கற்பிக்க எவராலும் முடியாது என்றும் அவர் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.