செங்கல்பட்டு அருகே 11-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலிப்பதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டி கர்ப்பமாக்கியுள்ளார். சிறுமிக்குக் காய்ச்சல் ஏற்பட்டபோது மருத்துவப் பரிசோதனை செய்ததில் அவர் 10 வார கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் குடும்பத்திற்கு அவமானம் என்று கருதிய உறவினர்கள், முறையான மருத்துவ ஆலோசனை இன்றி வீட்டிலேயே கருக்கலைப்பு செய்ய முயன்றுள்ளனர். இதில் சிறுமிக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 12 நாட்கள் உயிருக்குப் போராடிய சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் ஆரம்பத்திலேயே தகவல் தெரிவிக்காத தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் மீது புகார்கள் எழுந்துள்ளன. தற்போது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரைத் தேடி வருகின்றனர். கௌரவம் என்ற பெயரில் ஒரு பிஞ்சு உயிரைப் பறித்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
